தமிழ் சினிமாவில் மிகப் பெரும் வசூல் நாயகனாக கடந்த 40 வருடங்களாக இருந்து வருபவர் ரஜினிகாந்த். ஆனால், அவருடைய கடைசி சில படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை புரியவில்லை.
‘சிவாஜி’ படத்தில்தான் மிகவும் துடிப்பான, ஸ்டைலிஷான, பரபரப்பான ரஜினியைப் பார்க்க முடிந்தது. அதன் பின் வெளிவந்த ‘எந்திரன், லிங்கா’ படங்களில் கூட அவர் இளமையான தோற்றத்தில்தான் நடித்தார்.
ஆனால், ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த்தை வயதான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, ரஜினியை வேறு பக்கம் திசை திருப்பி விட்டதில் அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு பெரும் பங்குண்டு. அடுத்து அவர் இயக்கிய ‘காலா’ படத்திலும் ரஜினிகாந்தை ஒரு தாத்தாவாகவே மாற்றினார். அந்த இரண்டு படங்களும் ரஜினி ரசிகர்களை துளி கூட திருப்திப்படுத்தவில்லை.
பழைய ரஜினியை மீண்டும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய ரஜினி ரசிகர்களுக்கு ‘பேட்ட’ படத்தின் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சரியான விருந்து கொடுத்திருக்கிறார். ரஜினி ரசிகர்கள், நடுநிலை ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் ரஜினியை பழைய பார்முக்கு கார்த்திக் சுப்பராஜ் கொண்டு வந்துவிட்டார் என்று பாராட்டி வருகிறார்கள்.
அவர்களில் பலரும் மறைமுகமாக ‘கபாலி, காலா’ படங்களைப் பற்றி கிண்டலடித்து வருகிறார்கள். ரஜினியை ரசிகர்களிடம் இருந்து விலகிச் செல்ல வைத்ததில் ரஞ்சித்துக்கு அதிகப் பங்கிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.
‘பேட்ட’ படத்தின் வசூலும் அதை நிரூபித்து வருகிறது. ‘கபாலி, காலா’ படங்களை விட இந்தப் படம் அதிக வசூலைப் பெறும் என்று கோலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்.