இந்தியில் மட்டுமல்ல; தமிழிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் உள்ளனர்.
சமீபத்தில், நடிகை கஜோல் அளித்துள்ள பேட்டியில், தனக்கு இருமுறை கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், தன்னைப் போலவே கருச்சிதைவுக்கு ஆளாகும் பெண்களை, குடும்பத்தினர் தனிமைப்படுத்தக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
அது 2001ம் ஆண்டு. கபி குஷி கபி கம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம். அப்போதுதான் எனக்கு முதல் முறையாக கருச்சிதைவு ஏற்பட்டது. படம் நன்றாக வந்து, வெற்றிகரமாக ஓடியது. ஆனாலும், அது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. அடுத்து, இன்னொரு முறையும் கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட, இம்முறை வலியை அதிகமாக உணர்ந்தேன். ஆனாலும், மீண்டு வந்தேன்.
இப்போது என் கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கருச்சிதைவுக்கு ஆளானவர்கள் என்னைப் போல நிறைய பெண்கள் இருப்பர். அவர்களை, நம் நாட்டில் ஒதுக்கி வைக்கின்றனர். தனிமைப்படுத்துகின்றனர். குடும்பத்தினரே, அவர்களை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்துகின்றனர்.
இது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான். இதற்காக, பெண்கள்மீது குற்றம் சுமத்தி, அவர்களை குற்ற உணர்வுக்குத் தள்ளக் கூடாது.
இவ்வாறு கஜோல் கூறியிருக்கிறார்.

