Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

புவனேஷ்வர் குமார் – இந்திய அணியின் சைலன்ட் மேட்ச்வின்னர்!

October 27, 2017
in Sports
0
புவனேஷ்வர் குமார் – இந்திய அணியின் சைலன்ட் மேட்ச்வின்னர்!

புவனேஷ்வர் குமார் – இளம் இந்திய அணியின் பவுலிங் அட்டாக்குக்கு, இன்று இவர்தான் முதல்வன். நியூசிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றவரிடம் எந்த அலட்டலும் இல்லை. ஃபீல்டிங் நிற்கும்போது, பவுலிங்கில் பவுண்டரிகள் வழங்கும்போது, முன்னணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தும்போது, ஆட்டநாயகன் விருது வாங்கும்போது, இவ்வளவு ஏன், ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பர்ப்பிள் கேப் வாங்கும்போதும்கூட அதே எக்ஸ்ப்ரஷன். கொஞ்சம்கூட அவரிடம் ஆர்ப்பரிப்போ, ஆக்ரோஷமோ நாம் கண்டதில்லை. சைலன்டாக இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் புவி!

முதல் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி வீழ்ந்ததும், வீரர்கள் மீதான பிரஷர் எகிறியது. ஆனால், பயங்கர பிளானோடு வந்திருந்தார் புவி. மும்பையில் நல்ல தொடக்கம் தந்திருந்த முன்ரோவை வீழ்த்த, அடிக்கடி விரல் நுனியிலிருந்து ரிலீஸ் செய்யும் ‘நக்கிள் பால்’ (Knuckle ball) வீசினார். ஆனால், மற்றொரு ஓப்பனரான குப்திலுக்கு வேரியேஷன் காட்டினார். குட் லென்த்தில் வீசப்பட்ட பந்துக்கு குப்தில் காலியாக, அவர் ப்ளானின்படி நக்கிள் பாலின் மாயத்தில் வீழ்ந்தார் முன்ரோ. நியூசிலாந்து படகை கரைசேர்த்துக் கொண்டிருந்த ஹென்றி நிக்கோல்ஸையும் தன் அடுத்த ஸ்பெல்லில் போல்டாக்கினார். 10 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள். தன் முதல் ஸ்பெல் (5-0-18-2) முடிவின்போதே நியூசி-யின் ஆட்டத்தை அடக்கியதுதான் அவர் ஆட்டநாயகன் ஆகக் காரணம். இவரை 11 வீரர்களில் ஒருவர் என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது. பேட்டிங்குங்குக் கோலி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு பௌலிங்குக்கு புவி முக்கியம்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தான் வீசிய முதல் பந்திலேயே உலகை உறையவைத்தவர் புவி. ஆறாவது ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட அந்தப் பந்து, உச்சகட்ட ஸ்விங் ஃப்ரண்ட்லி பிட்சில்கூட ஆஃப் ஸ்டிக்குக்கு வெளியேதான் போயிருக்கும். ஆனால், புவனேஷின் அந்த சர்ப்ரைஸ் பால், முகமது ஹஃபீசின் ஆஃப் ஸ்டம்பைப் பதம்பார்த்தது. என்ன நடந்தது என்று தெரியாமல், ஆடிப்போய் நின்றிருந்தார் ஹஃபீஸ். வெகுநாள்களாக அப்படியொரு ஸ்விங்கை, இந்திய பௌலர் ஒருவரிடம் பார்த்திடாத இந்திய ரசிகர்களுக்கும் அது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அடுத்த ஜாகீர் இவர்தானோ என மகிழ்ந்தனர். இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா, முகமது ஷமி, உனத்கட் என்று சீசனுக்கு சீசன் இந்திய அணிக்கு பவுலர்கள் வருவதும் போவதுமாக இருக்க, ஜாகீர் கானுக்கு ஒரு ‘சக்சஸர்’ இல்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது. புவியின் அடுத்தடுத்த பெர்ஃபாமென்ஸ்கள், அன்று அவரை ஜாகீருக்கு மாற்றாக முன்னிருத்தவில்லை. நல்ல ஸ்விங், நல்ல டெக்னிக். ஆனால், அதிகம் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. 2015 உலகக்கோப்பையில் பிளேயிங் லெவனிலேயே இடம் கிடைக்கவில்லை. ஷமி, உமேஷ் இருவரும் ‘விக்கெட் டேக்கர்ஸ்’ என்ற வகையில் அணியில் இடம்பிடிக்க, புவியின் இடம் கேள்விக்குள்ளானது.

ஒரு சிலரின் ‘கம்-பேக்’குகள் மிகவும் பேசப்படுவதாய் இருக்கும். ஆனால் புவியின் கம்-பேக் கூட சத்தமில்லாமல்தான் நடந்தேறியது. 2016 ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முதல் காரணம் இவர்தான். அதற்குப் பிறகுதான் முஸ்தாஃபிசுர், வார்னர் எல்லாம். அதுவரை ஸ்விங்கையே பிரதான ஆயுதமாகக் கொண்டிருந்த அவர், ஸ்டம்புகளைக் குறிவைக்கத் தொடங்கினார். இன்ஸ்விங்கர்கள் மட்டும் வீசாமல் அவுட் ஸ்விங்குகளும் வீசத் தொடங்கினார். ஓப்பனிங் ஸ்பெல் பௌலர் என்ற அடையாளத்தை உடைத்து ‘டேஞ்சரஸ் டெத் பௌலர்’ ஆனார். துல்லியமான யார்க்கர்களால் விக்கெட் வேட்டை நிகழ்த்தினார். 23 விக்கெட். பர்ப்பிள் கேப் வசமானது. ஆனால், அந்தப் பழைய புவி தொலையவில்லை. 408 ரன்கள் எடுக்கப்பட்ட ஃபைனலில், கெய்ல், விராட், ஏ.பி என்ற மாபெரும் படையை பெட்டிப்பாம்பாய் வைத்திருந்தார். அந்தப் போட்டியில் எகானமி 7.5-க்கும் குறைவாக இருந்தது இவருக்கு (6.25) மட்டுமே. 4 ஓவர்களில் 13 ‘டாட் பால்’கள். புவி வெர்ஷன் 2.0 கிளம்பியது அப்போதுதான்.

ஆரம்ப கட்டத்தில் முதல் ஸ்பெல்லிலேயே 7 ஓவர்கள் வீசிவிட்டு, சம்பரதாயத்துக்காக 10 ஓவர் கோட்டாவை கடைசியில் நிறைவு செய்துகொண்டிருந்தார். பல போட்டிகளில் 6,7 ஓவர்கள் மட்டுமே வீசுவார். ஆனால், இப்போது, உலகின் தலைசிறந்த டெத் பௌலர்களில் ஒருவர். ஆரம்ப ஸ்பெல்லில், ஓப்பனர்களைத் திண்டாடவைப்பவர், 40-வது ஓவருக்கு மேல் அதிரடி காட்டக் காத்திருப்போருக்கு எமனாய் மாறுகிறார். பிட்ச் ஸ்விங்குக்கு உதவுகிறதோ, இல்லையோ, புதுப் பந்தை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு பயன்படுத்துகிறார். வார்னர், ஃபின்ச், ஆம்லா, ஜேசன் ராய் போன்ற டாப் ஓப்பனர்கள்கூட, இவரின் ஓப்பனிங் ஸ்பெல்லில் தடுமாறினர். காரணம் வெறும் ஸ்விங்கோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு வேரியேஷன்களைத் தனது பௌலிங்கில் காட்டினார். நக்கிள் பால்களை அவ்வப்போது பயன்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார்.

புவியின் இந்தப் புது வெர்ஷனை, 2017-ல் அவருடைய செயல்பாடே விளக்கிவிடும். 2016 வரை ஒருநாள் போட்டிகளில் 59 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். சராசரியாக, அவர் வீசிய ஒவ்வொரு 51 பந்துக்கும் ஒரு விக்கெட். ஆனால், இந்த ஆண்டு மட்டும் 19 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். சராசரியாக 37 பந்துகளுக்கு 1 விக்கெட். இந்த ஸ்டாட்டிஸ்டிக்ஸே, புவி தன் பந்துவீச்சில் கொண்டுவந்த மாற்றத்தைச் சொல்லிவிடும். எந்தக் காரணத்தால், 2015 உலகக்கோப்பையில் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கத் தினறினாரோ, அதை இன்று மெருகேற்றிவிட்டார். அதேசமயம், ஷமியைப் போல் விக்கெட் வீழ்த்துவதற்காக ரன் கொடுப்பதில் இவர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. இந்த ஆண்டு அவரது எகானமி ரேட் 4.83. ஒருநாள் போட்டிகளில் அவரது ஒட்டுமொத்த எகானமி 4.87. இந்த கன்சிஸ்டன்ஸிதான் அவருக்கான வெற்றி. 19 போட்டிகளில் 25 விக்கெட் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த ஓப்பனிங் ஸ்பெல்லில் இவர் வீழ்த்தும் அந்த ஒரு விக்கெட், இவர் கொடுக்கும் அந்தப் பிரஷர், எதிரணியின் சைக்காலஜியை ஆரம்பத்திலேயே தாக்கிவிடுகிறது. அதன் பலனை இந்தியா அனுபவிப்பது உண்மை.

பழைய அஷ்வின் – ஜடேஜா கூட்டணியும் சரி, இன்றைய சாஹல் – குல்தீப் கூட்டணியும் சரி, புவி – பூம்ராவின் அற்புத முதல் ஸ்பெல் கொடுக்கும் ஆதாயங்களைக் கொஞ்சம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியைச் சொல்லலாம். 21 ஓவர்களில் 164 ரன்கள் எடுக்கவேண்டும். அடிக்கடி மழைக்குறுக்கீடு வேறு. முதல் பந்திலிருந்தே அடித்தாட வேண்டும் என்ற ப்ளானோடுதான் களம் கண்டிருப்பார் வார்னர். ஆனால், புவி வீசிய முதல் ஓவரில் அவரால் ஒரு சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள். அதில் ஒரு விக்கெட் இழப்பு வேறு. ரன் ரேட் எகிற, பிரஷர் ஏறிப்போய் நிதானம் இழந்து, பாண்டியாவிடம் ஸ்மித்தும், குல்தீப்பிடம் வார்னரும் வீழ்ந்தனர். கடைசிவரை ஆஸி அணியால் நிமிர முடியவில்லை. இரண்டாவது போட்டியில் வெறித்தனம் காட்டிய புவி 37 பந்துகள் வீசி, வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். அந்த 37 பந்துகளில் 31 டாட் பால்கள்! புவியின் தேவை அந்தத் தொடரின் 4-வது போட்டியில் தெளிவாகத் தெரிந்தது. உமேஷ் யாதவ் -ஷமி கூட்டணியின் முதல் ஸ்பெல்லில் 63 ரன்கள் எடுத்தனர் வார்னரும், ஃபின்சும். விளைவு, ஆஸி அணி 334 ரன்கள் குவித்தது. இந்திய அணி அத்தொடரில் தோற்ற ஒரே போட்டி அது. சிக்கனமான முதல் ஸ்பெல் என்பது அவ்வளவு முக்கியம். அந்த வகையில் புவனேஷ்வர் குமார், இந்தியாவுக்கு அத்யாவசியம்.

வெற்றிகளில் மட்டுமல்ல, தோல்வியுற்ற பல்வேறு போட்டிகளிலும் கூட இவரது பௌலிங் தனித்துத் தெரியும். சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தான் அணி 338 ரன்களைக் குவித்தது. அந்தப் போட்டியில் இவர் 10 ஓவர்களில் கொடுத்த ரன்கள் வெறும் 44. அதில் 2 மெய்டன் ஓவர்கள் வேறு. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி-20 போட்டியில் 18.3 ஓவர்களில் 194 ரன்களை வாரி வழங்கியிருப்பார்கள் நம் பெளலர்கள். அந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பார் புவி. ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸி அணி ஓவருக்கு 7.87 ரன்கள் வீதம் எடுத்து வென்றிருக்கும். அந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பார் இந்த சிக்கன நாயகன். இந்த ஆண்டு இந்தியா தோல்வியுற்ற 6 ஒருநாள் போட்டிகளில் 4 போட்டிகளில்தான் இவர் ஆடினார். அந்தப் போட்டிகளில் எதிரணியின் ரன்ரேட் 6.84. ஆனால், புவியின் எகானமி 5.42 தான். அந்தப் போட்டிகளிலும் சிக்கனமாகவே பந்துவீசியவர், விக்கெட் வீழ்த்தவும் தவறவில்லை. அந்த 4 போட்டிகளிலும் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். இப்படி தோற்ற போட்டிகளில்கூட இவர் சோபிக்கத் தவறவில்லை. இந்த ஆண்டு இவர் விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்கியுள்ளார்.

“ஃபாரீன் சாயில்ல பெர்ஃபார்ம் பண்ணியிருக்காரா?” – இந்தக் கேள்வியையும் ‘டிக்’ அடிக்கிறார் புவி. இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர் இரண்டிலும் இவரின் செயல்பாடு பக்கா. சாம்பியன்ஸ் டிராபி தொடரில், 4 விக்கெட்டுக்கு மேல் எந்த இந்திய பௌலரும் வீழ்த்தவில்லை. புவி மட்டும் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அத்தொடரில் எகானமி ஐந்துக்கும் குறைவாக (4.63) வைத்திருந்த ஒரே இந்தியர் இவர்தான். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2 ஒருநாள் போட்டிகளிலும், 1 டி-20 போட்டியிலும் மட்டுமே பந்துவீசினார். ஒருநாள் தொடரில் 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார். இப்படி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வெளியில் ஆடிய போட்டிகளிலும் புவி டாப் கிளாஸ்.

பௌலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார் புவி. இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனியோடு சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து, அணியைத் தோல்விப் பாதையிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டியில், பொறுமையாக விளையாடி 80 பந்துகளில் அரைசதம் அடித்து அந்தப் போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுடனான சென்னை போட்டியிலும், நியூசிலாந்துடனான முதல் போட்டியிலும்கூட கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி, அணியின் ஸ்கோர் அதிகமாக உதவியுள்ளார். வெறுமனே பவுண்டரி, சிக்சர்களுக்குக் குறிவைக்காமல், ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் போல் அணியின் நிலைமைக்குத் தகுந்தவாறு விளையாடுகிறார். இவரது பேட்டிங் திறன், பாண்டியா போன்ற வீரரின் பிரஷரைக் குறைத்து, அவர் ஃப்ரீயாக விளையாட உதவுகிறது. இந்த வகையிலும் இவர் அணிக்குப் பெரும்பலம்.

77 ஒருநாள் போட்டிகளில் 84 விக்கெட்டுகள் என்பதொன்றும் பெரிய விஷயம் இல்லைதான். ஆனால், கொத்துக்கொத்தாக விக்கெட் வேட்டை நடத்துவது மட்டும் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு அடையாளம் என்பதில்லை. முதல் ஸ்பெல்லில் பிரஷர் கொடுத்து, ஆரம்பத்தில் இருந்தே சைக்கலாஜிக்கலாக அட்டாக் செய்ய வேண்டும். மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப்களை உடைக்க வேண்டும். நன்றாக அடித்து ஆடும் ஒரு பேட்ஸ்மேனின் ஃப்ளோவை, கான்ஃபிடன்ஸை, ஓர் அற்புத ஓவரால் உடைக்க வேண்டும். இன்றைய பேட்டிங் ஃப்ரெண்ட்லி சூழ்நிலையில் டெத் ஓவர்களில் முடிந்தவரை ரன்குவிப்பைத் தடுக்க வேண்டும். இவையெல்லாம்தான் திறமையான வேகப்பந்துவீச்சாளருக்கான அடையாளங்கள். சமிந்தா வாஸ் – இலங்கையின் தலைசிறந்த ஃபாஸ்ட் பௌலர். 322 போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு 1.24 விக்கெட்டுகள். 393 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷான் போலக், ஒரு போட்டிக்கு சராசரியாக வீழ்த்திய விக்கெட்டுகள் 1.30. இவர்கள் தலைசிறந்த பௌலர்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லையே…

அந்த வகையில் புவி இந்த ஃபார்மைத் தொடர்ந்தால், அவர்களைப் போல் ஓர் உலகத்தரம் வாய்ந்த பௌலராக உருவெடுக்கலாம். இந்த ஆண்டு ஒரு போட்டிக்கு அவர் சராசரியாக வீழ்த்திய விக்கெட் எண்ணிக்கை 1.32. இந்த வேகத்தில் சென்றால் அவரால் நிச்சயம் இந்தியாவின் தலைசிறந்த ஃபாஸ்ட் பௌலராக உருவெடுக்க முடியும். நெஹ்ரா, பதான், ஹர்பஜன் ஆகியோரைத் தளபதிகளாகக் கொண்டு ஒருகாலத்தில் ஆட்சி புரிந்தார் ஜாகீர். அதன்பின் ஒரு கன்சிஸ்டன்ட்டான ஃபாஸ்ட் பௌலர் நம் அணிக்குக் கிடைக்கவே இல்லை. அந்த வகையில் நாம் நம்பக்கூடிய ஒரு பௌலர் புவி. பூம்ரா, பாண்டியா, சாஹல், குல்தீப் என்ற இளம் படையை இந்த இரண்டு தொடர்களிலும் நன்றாக வழிநடத்துகிறார். அடிக்கடி அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். எந்தச் சூழ்நிலையிலும் கூலாக இருக்கிறார். விக்கெட் எடுப்பதில் இன்னும் கொஞ்சம் வீரியத்தைக் கூட்டினால், சந்தேகமே இல்லை புவனேஷ்வர் குமார்தான் இந்தியாவின் வலதுகை ஜாகீர்.

Previous Post

10 மீட்டர் ஏர் பிஸ்டலில் ஜிது ராய், பூஜா ஏமாற்றம்; இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை

Next Post

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த்

Next Post
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த்

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures