தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் ஆகியவை வரும் போது எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுவது வழக்கம். அப்படிப்பட்ட காட்சிகளைத் தவிருங்கள், படத்தில் வைக்காதீர்கள் என இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் சமூக நல அமைப்புகள், சில அரசியல் தலைவர்கள் பல முறை கோரிக்கை வைத்தும் ஒரு சிலர் இன்னும் அதை ஏற்காமலே இருக்கிறார்கள்.
புகை பிடிக்கும் காட்சிகளை தன் படங்களில் மிக அதிகமாக வைத்திருந்த ரஜினிகாந்த் கூட கடந்த சில படங்களாக அப்படிப்பட்ட காட்சிகள் தன் படங்களில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். அதை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் சில ஹீரோக்கள் புகை பிடிக்கும் காட்சிகளை அவர்கள்து படங்களில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷ் முக்கியமானவர்.
அவருடைய படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இயல்பாக இல்லாமல் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் வைப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் கூட அப்படிப்பட்ட காட்சிகள் அதிகம் உள்ளன.
சிறு குழந்தைகள் பலரும் உங்களது ரசிகர்களாக இருக்கிறார்கள், அப்படிப்பட்ட புகை பிடிக்கும் காட்சிகள், மிகைப்படுத்தப்பட்டு காட்டப்படுவதை நீங்கள் தவிர்க்கலாமே என நேற்று நடைபெற்ற விஐபி 2 பட வெற்றி விழாவில் ஒரு பெண் நிருபர் தனுஷிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த தனுஷ், ‘எனக்கு அப்படித் தெரியவில்லை’ என பதிலளித்தார். தொடர்ந்து அதற்கு பதிலளிக்க விரும்பாமல் அடுத்த கேள்விக்குப் போய்விட்டார்.
“எனது படங்களில் இனி அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன், இயக்குனர்களிடமும் அப்படி சொல்லிவிடுகிறேன். புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்து விடுகிறேன்,” என தனுஷ் சொல்ல மறுப்பது ஏன் ?.
சிறியவர்கள், இளைஞர்கள் பலரும் அவருடைய ரசிகர்களாக இருப்பது தனுஷுக்குத் தெரியாதா என்ன ?.