பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, தற்போதும் சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கிறார்.
தற்போது அவர் போதை தரும் ஒரு புகையிலை (பான் மசாலா) கம்பெனி விளம்பரத்தில் நடித்துள்ளார். அதோடு அந்த விளம்பரத்தை தனது இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் கேட்வாக்கில் நடந்து செல்கிறார் அனுஷ்கா சர்மா. உடன் நடந்து வரும் மாடல் அழகியின் உடையின் மேல் பகுதி கழன்று கொள்கிறது. அதை தனது சமயோசித புத்தியால் சமாளிக்கிறார். அதன் பிறகு நடக்கும் பார்ட்டியில் எல்லோருடனும் மகிழ்ச்சியாக இருக்கிறார். பின்னர் அந்த புகையிலையை எடுத்து வாயில் போடுகிறார். இந்த புத்திசாலித்தனத்திற்கும், மகிழ்ச்சிக்கும் காரணம் அந்த புகையிலை என்பது அந்த விளம்பரத்தின் கான்செப்ட்.
இப்போது இது கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. வாய் புற்று நோயை ஏற்படுத்தும் புகையிலை விளம்பரத்தில் பொறுப்புள்ள கிரிக்கெட் கேப்டனின் மனைவி எப்படி நடிக்கலாம். கணவர் விராட் கோலி மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கும்போது, அவரது மனைவி மட்டும் நடிக்கலாமா? புகையிலையால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அந்த உயிர்களை விட அனுஷ்காவுக்கு பணம் முக்கியமாக போய்விட்டதா என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதே விளம்பரத்தில் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் போர்சன் நடித்திருந்தார். கடும் விமர்சனத்திற்கு பிறகு அவர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

