லோதா பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஆர்வம் இல்லாத, பி.சி.சி.ஐ.,யின் தற்போதைய நிர்வாகிகளை நீக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ‘லோதா’ பரிந்துரைகளை வழங்கியது.
இதை வினோத் ராய், டயானா எடுல்ஜி அடங்கிய கிரிக்கெட் நிர்வாகக் குழு (சி.ஒ.ஏ.,) கண்காணிக்கிறது. இதன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால அறிக்கை தாக்கல் ஆனது.
இதில் இடம் பெற்ற விவரங்கள்:
* பி.சி.சி.ஐ., நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டு வர அதிக அதிகாரம் தேவைப்படுகிறது.
* மாநில சங்கங்களுக்கு நிதி வழங்குவதில் புதிய முறை கொண்டு வரப்பட வேண்டும்.
* ஒவ்வொரு மாநில சங்கங்களின் வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்ய, தனித்தனி குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
* மாநில சங்கங்களின் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
* லோதா பரிந்துரைகளை அமல்படுத்த ஆர்வம் காட்டாத, தற்போதுள்ள பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் சி.கே.கன்னா, அமிதாப் சவுத்தரி, அனிருத் சவுத்தரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் முடியும் வரை பொறுப்புகளை பி.சி.சி.ஐ., தலைமை அதிகாரி ராகுல் ஜோரியிடம் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.