நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், அரசியலில் குதித்தார். அது முதல், அவர், இந்துத்துவாவையும், பா.ஜ.,வையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர், டிபாசிட் கூட பெறாமல் மோசமாக தோல்வி அடைந்தார். இருந்தபோதும், அவர், தன்னுடைய இந்து, பா.ஜ., எதிர்ப்பை கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ராம்லீலா நிகழ்ச்சியை, குழந்தைகள் ஆபாசத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். அதோடு உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தையும் மோசமாக விமர்சித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.
இதையடுத்து, பிரகாஷ் ராஜ், திரைப்படங்களில் நடிக்க வாழ்நாள் தடைவிதிக்க வற்புறுத்தி, இந்து மகாசபா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் கன்னட திரைப்பட வர்த்தக சபையில் மனு அளித்துள்ளன.
அந்த மனுவில், அந்த அமைப்பினர் கூறியிருப்பதாவது: இந்து மதத்தையும்; இந்து மத தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பேசி வருகிறார். இது, இந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது. எனவே, அவர் படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

