பிகில் படத்தின் உண்மையான நான்கு நாள் வசூல் என்ன என்பதை அந்தப் படத்தைத் தயாரித்த எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சொல்லவில்லை, அந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட்ட ஸ்கிரின் சீன் நிறுவனமும் சொல்லவில்லை.
ஆனால், சமூக வலைத்தளங்களில் 100 கோடி, 150 கோடி என பலர் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 நாட்களில் 100 கோடியும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 10 கோடியும், கேரளா, கர்நாடகாவில் தலா 10 கோடியும், வெளிநாடுகளில் 20 கோடியும் என வசூலித்துள்ளதாகச் சொல்லி உள்ளார்கள்.
இது அனைத்தும் மொத்த வசூல். அதிலிருந்து நிகர வசூல் என்ன என்பது வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும்தான் தெரியும். படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கே அந்தத் தகவல் போய்ச் சேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
கைதி படம் சரியான போட்டியாக இருப்பதாலும், விஸ்வாசம், பேட்ட படங்களின் வசூலை விட பிகில் படம் அதிக வசூலைப் பெறவேண்டும் என்பதாலும் பலவிதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இப்படி விதவிதமான வசூல் தகவலைகள் வந்து குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க பிகில் படம் சம்பந்தப்பட்டவர்கள் சரியான வசூல் நிலவரத்தை வெளியிட்டு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தினால் தமிழ் சினிமாவுக்கு சிறப்பாக இருக்கும்.

