சமூக வலைத்தளங்களில் தான் சினிமா பற்றிய கடுமையான விவாதங்களும், தகவல்களும் அதிகமாக வருகின்றன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட தமிழ் சினிமா பிரபலங்கள் டுவிட்டரில் தான் பரபரப்பாக இயங்குவார்கள். அது அவர்களின் ரசிகர்களிடத்திலும் தொற்றிக் கொண்டுவிட்டது.
டிரெண்டிங் சண்டையெல்லாம் டுவிட்டரில் மட்டுமே நடக்கும். அதிலும், விஜய், அஜித் ரசிகர்கள் இடையேயான சண்டைக்கு நேரம், காலமே கிடையாது. எப்போது வேண்டுமானாலும் காரணமே இல்லாமல் கூட சண்டை போட்டுக் கொள்வார்கள்.
அதனால், டுவிட்டரில்தான் அவர்களது படங்களையும் அதிகமாகப் பிரபலப்படுத்துவார்கள். அந்த வகையில் ஒன்றுதான் ‘எமோஜி’.
விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்திற்குத்தான் முதன்முதலில் இந்த எமோஜி நடைமுறை அறிமுகமானது. அடுத்து ‘காலா, என்ஜிகே’ ஆகிய படங்களுக்கு எமோஜி வெளியிட்டார்கள். இப்போது ‘பிகில்’ படத்திற்கும் எமோஜி வெளியிட்டுள்ளார்கள்.
“பிகில், பிகில் தீபாவளி, போட்றா வெடிய, வெறித்தனம், தளபதி 63” ஆகிய வார்த்தைகளுக்கு விஜய் கையில் கால்பந்து வைத்திருப்பது போன்ற எமோஜியை வெளியிட்டுள்ளார்கள்.
அஜித் படத்திற்கு இதுவரை இப்படி எந்த எமோஜியையும் வெளியிட்டதில்லை.

