பண்டிகை நாட்கள் என்றாலே அதிகாலை சிறப்புக் காட்சிகள் தியேட்டர்களில் நடைபெறுவது வழக்கம். தற்போது ஓரளவிற்கு முன்னணியில் உள்ள நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் படங்களுக்கும் காலை சிறப்புக் காட்சி நடைபெற ஆரம்பித்து விட்டது.
அப்படியென்றால் விஜய் போன்ற நடிகர்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சி இல்லை என்றால் அவர்களது ரசிகர்களுக்கு எப்படி இருக்கும். அப்படி ஒரு மனநிலையில்தான் இப்போது விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பலருக்கும் அதிகாலை 5 மணி காட்சியைப் பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் நான்கு வரிகளாவது எழுதி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், தமிழக அரசு அப்படிப்பட்ட காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டது.
இருப்பினும் சென்னை புறநகர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சில தியேட்டர்களில் 5 மணி காட்சிகளுக்கு ஏற்கெனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டார்கள். இப்போது அந்தக் காட்சிகள் நடக்குமா நடக்காதா என்பது தெரியவில்லை. முதலிலேயே பார்க்க வேண்டும் என அந்தக் காட்சிகளுக்கு அவசரப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இப்போது முதல் நாளில் கூட படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனால், அந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்திற்கு நடு இரவில் 1 மணிக்கெல்லாம் சிறப்புக் காட்சிகள் நடந்தது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு தகவல்.

