அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள ‘பிகில்’ படம் நாளை மறுநாள் அக்டோபர் 25ம் தேதி வெளியாக உள்ளது.
அந்தப் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் கே.பி. செல்வா என்பவர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், வழக்கைத் திரும்பப் பெறவும், புதிதாக வழக்கு தொடர முடியாது என்றும் சிட்டி சிவில் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கினர்.
அந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் செல்வா வழக்கு தொடர்ந்தார். சிட்டி சிவில் கோர்ட் அளித்த தீர்ப்பை உயர்நீதி மன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், செல்வா பதிப்புரிமை வழக்கு தொடரவும் அனுமதி அளித்தது. இப்போது நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப் போவதாக செல்வா தெரிவித்துள்ளார்.
“சிட்டி சிவில் கோர்ட்ல வந்த தீர்ப்பு தவறானதுன்னும் வேற புது கேஸ் போடவே முடியாதுன்னு சொன்னது எல்லாம் பொய்ன்னும் நேத்து உயர் நீதிமன்றத்துல வந்த தீர்ப்பு நிரூபிச்சிருக்கு!! இதுவே எங்களோட முதல் சிறிய வெற்றியா நாங்க கருதுகிறோம்!! மேலும் என்னோட உரிமைக்காக விரைவில் வழக்கு தொடரவுள்ளேன்!!” என அவருடைய முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

