ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழில் 2.0 படத்திலும் நடித்தவர் அக்ஷய்குமார். இந்த ஆண்டு நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை. அவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் தான் அவர் வாக்களிக்கவில்லை என்ற விவரம் அதன் பின்னரே வெளிவந்தது. அது பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்தியாவில் நடித்து பல கோடி சம்பாதித்து இந்தியா நாட்டின் குடிமகனாக இல்லாமல் இருப்பதா என பலரும் விமர்சித்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக அக்ஷய்குமார் தெரிவித்துள்ளார்.
“ஆரம்ப காலத்தில் என்னுடைய 14 படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்தன. அப்போது கனடாவில் இருக்கும் என் நெருங்கிய நண்பன் கனடாவிற்கு வருமாறு அழைத்தார். அங்கு ஏதாவது ஒன்றாக செய்யலாம் என்றான். அவனும் ஒரு இந்தியன் தான், ஆனால் அங்கு செட்டிலானவன். என்னுடைய நடிப்புலக வாழ்க்கை முடிந்ததாக நினைத்து கனடா குடியுரிமைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றேன். ஆனால், என்னுடைய 15வது படம் வெற்றி பெற்றது, அதன் பின் என் வாழ்க்கையில் எந்த பின்னடையும் இல்லை. ஆனால், எனது பாஸ்போர்ட் மாற்றம் பற்றி என்றுமே சிந்தித்ததில்லை.
இப்போது மக்கள் எனது பாஸ்போர்ட் விவகாரத்தைப் பற்றிப் பேசுவதால் என்னுடைய தேசபக்தியைக் காட்ட இந்திய பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ளேன். இது எனக்கு வலியைத் தருகிறது. இதை மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கொடுக்க விரும்பவில்லை. என் மனைவி டிவிங்கிள் கண்ணா இந்தியன், என் மகன் இந்தியன். நானும் இங்குதான் வரி கட்டுகிறேன். எனது வாழ்க்கை இங்குதான், ஆனாலும் சிலர் ஏதோ சொல்ல விருப்பப்படுகிறார்கள், பரவாயில்லை,” என்று அக்ஷய் தெரிவித்துள்ளார்.

