ஃபேஷன் நகரம். பழைமைவாதத்தைப் போற்றும் ஸ்பெய்னில் மாடர்ன் கலாசாரத்தைப் புகுத்திய நகரம். இங்கு நடக்கும் ஃபேஷன் ஷோக்கள் உலக பிரசித்தி. ஆனால், இந்த உலகைப் பொறுத்தவரை பார்சிலோனா என்றால் ‘ஃபுட்பால் க்ளப் பார்சிலோனா’ தான். இப்போது கால்பந்துதான் இந்நகரின் அடையாளம். பார்சிலோனாவைப் போலத்தான் இங்கிலாந்தின் மான்செஸ்டர். உலகின் தலைசிறந்த டெக்ஸ்டைல் நகரம். இந்த நகருக்கு அடையாளமாக இருப்பதும் கால்பந்துதான். காரணம், மான்செஸ்டர் யுனைடட். இங்கிலாந்தின் தலைசிறந்த கிளப். ஆனால், இனி இந்நிலை மாறும். மான்செஸ்டர் நகருக்குப் புதியதோர் அடையாளத்தைத் தேடிக்கொடுக்கக் கிளம்பிவிட்டது மான்செஸ்டர் சிட்டி… இங்கிலாந்து கால்பந்தின் இன்றைய சென்சேஷன்.
ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் `டெர்பி’ என அழைக்கப்படும். உதாரணமாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மும்பை இந்தியன்ஸ், புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் மோதிய போட்டியை, `மஹாராஷ்டிரா டெர்பி’ என்பார்கள். அப்படிக் கால்பந்தில் டெர்பி போட்டிகள் பலவும் பிரபலம். அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் மான்செஸ்டர் யுனைடட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதும் மான்செஸ்டர் டெர்பி. 1980, 90-களில் இந்தப் போட்டிகளுக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்காது. ஐரோப்பிய அளவில் ஆதிக்கம் செலுத்திய யுனைடட், மான்செஸ்டர் சிட்டி அணியை அசால்டாக அடித்து நொறுக்கும். ஆனால், இன்று அப்படியில்லை. யுனைடட் அப்படியேதான் இருக்கிறது. சொல்லப்போனால், அது முன்பைப் போன்று ஆதிக்கம் செலுத்தும் அணியில்லை. மறுபுறம் மான்செஸ்டர் சிட்டி உலகக் கால்பந்தின் மாபெரும் சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.
2017-18 சீசன் பிரீமியர் லீக் தொடரில் 27 போட்டிகள் முடிவடைந்துவிட்டன. பொதுவாக இந்தத் தருணம்தான் ஒவ்வொரு டாப் அணியும் டைட்டிலுக்காகக் கடுமையாகப் போட்டி போடும். இம்முறையும் மான்செஸ்டர் யுனைடட் (56 புள்ளிகள்), லிவர்பூல் (54 புள்ளிகள்), செல்சீ (53 புள்ளிகள்), டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் (52 புள்ளிகள்) என 4 அணிகள் 3 இடங்களுக்குப் போட்டிபோடுகின்றன. ஆனால், அது முதல் 3 இடங்களுக்கான போட்டி அல்ல. சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு பெற்றுத்தரும் 2 முதல் 4-ம் இடங்களுக்கான போட்டி. ஏனெனில், இந்த அணிகளுக்கு எட்டாத தூரத்தில், யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் அமர்ந்திருக்கிறது மான்செஸ்டர் சிட்டி.