பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி (பாப்டா) விருதில் சிறந்த படம் உட்பட 7 விருதுகளை தட்டிச் சென்றது ‛1917′ படம்.
உலகளவில் பிரசித்தி பெற்ற திரைப்பட விருது பாப்டா. 2019ம் ஆண்டுக்கான பாப்டா விருதுகள் லண்டனில் கோலாகலமாய் நடந்தது. மெண்டிஸ் இயக்கத்தில் முதல் உலகப்போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, ‛1917′ படம் பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறந்த படம், பிரிட்டிஷ் படம், இயக்குனர், ஒலி அமைப்பு, தயாரிப்பு, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என 7 பிரிவுகளில் இப்படம் விருது வென்றுள்ளது.
சிறந்த நடிகராக ‛ஜோக்கர்’ படத்தில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ், சிறந்த நடிகையாக ஜூடி படத்தில் நடித்த ரெனீ ஜெல்வெகர் தேர்வாகி, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆங்கிலம் அல்லாத பிறமொழி பட வரிசையில் தென் கொரியாவின் பாரசைட் சிறந்த படமாக தேர்வானது. சிறந்த துணை நடிகராக பிராட் பிட், துணை நடிகையாக லாரா டெர்ன் தேர்வாகினர்.

