மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‛பிக் பிரதர்’. சித்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகின.. இந்த இரண்டையும் கவனித்துப் பார்த்தால் இந்த படத்தின் கதை ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான பாட்ஷா படத்தின் கதையை ஒட்டியே உருவாகி உள்ளது போல தெரிகிறது. அதற்கேற்றார்போல டிரைலரில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் சூசகமாக அதை உணர்த்துகின்றன.
குறிப்பாக An ordinary man with extraordinary past, அதாவது மிகப் பயங்கரமான கடந்த காலம் கொண்ட ஒரு சாதாரண மனிதன் என்கிற இந்த படத்தின் டேக் லைனே பாட்ஷாவின் ஒருவரி கதையோடு அழகாக ஒத்துப்போகிறது.
ஒரு காட்சியில் மோகன்லாலின் தம்பி போலீஸ் வேலைக்கு சேர முயற்சிக்கிறார்.. நேர்முகத் தேர்வின் போது உயரதிகாரி தம்பியிடம் உங்கள் அண்ணனின் பெயர் என்ன என்று கேட்கிறார்.. அதற்கு இன்னொரு பக்கம் வேறு ஒரு இடத்தில் ஒரு சோபாவில் அமர்ந்துள்ள மோகன்லால் சச்சிதானந்தன் என்று தன் பெயரை கூறுவதாக டிரைலரை கட் பண்ணி உள்ளார்கள்..
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சல்மான்கானின் தம்பி அர்பாஸ்கான் நடித்துள்ளார் மோகன்லாலிடம் ஒரு காட்சியில் “ஹாஸ்பிடலில் இருக்கும் ஷெட்டிக்கும் அவரது மகனுக்கும் ஏதாவது நடந்தது என்றால் நீ தப்பிக்க முடியாது” என்று எச்சரிக்கிறார். அதேபோல மோகன்லால் ஒருவரிடம், “திரும்பவும் நினைத்து பார்க்க விரும்பாத கடந்த காலம் ஒன்று எனக்கு இருக்கிறது.. அதை எல்லாம் விட்டுவிட்டு ஒதுங்கி ஒரு சாதாரண மனிதனாக என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்… என்னை இப்படியே இருக்க விடுங்கள்” என்று கூறுகிறார்..
குறிப்பாக இந்த படத்தில் மோகன்லால் தனது இரண்டு தம்பிகளுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக ட்ரெய்லர் தெளிவாக சொல்கிறது.. இப்படி பல விஷயங்கள் இந்த பிக் பிரதர் படம் நிச்சயம் ஒரு பாட்ஷா பாணியிலான படம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது. பாட்ஷா படத்தை, அதன் கதையை ஒட்டி அதன் பிறகு எத்தனையோ படங்கள் தமிழ்சினிமாவில் வெளிவந்துவிட்டன.. சமீபத்தில் வெளியான அசுரன் படம் கூட பாட்ஷாவின் இன்னொரு வெர்ஷன் போல இருந்ததாக ரஜினியே ஒப்புக்கொண்டுள்ளார். அந்தவையில் இந்த பாட்ஷா லைன் மோகன்லாலுக்கும் வெற்றிகரமாக அமையும் என நம்புவோம்…

