பிரபல பாடலாசிரியர் பா.விஜய். ஆட்டோகிராப் பட பாடலுக்கக தேசிய விருது பெற்றவர். ஞாபகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்துக்கு கதை, பாடல்களையும் அவரே எழுதியிருந்தார்.
அடுத்து, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி வசனம் எழுதிய இளைஞன் படத்திலும் நடித்திருந்தார். ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தை தயாரித்து இயக்கி, நடித்தார். இடையில் நடிப்பு, இயக்கம் என்று கவனம் செலுத்திய பா.விஜய், பாடல் எழுவதில் மீண்டும் கவனம் செலுத்தத் துவங்கி இருக்கிறார்.
இதுபற்றி, அவர் கூறியிருப்பதாவது:
பாடல் எழுதுவதில், மீண்டும் அதிக கவனம் செலுத்துகிறேன். நடிகர் விஷாலின் ஆக்ஷன் படத்துக்காக அனைத்து பாடல்களையும் நான் தான் எழுதினேன். நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ, சீனு ராமசாமியின் மாமனிதன் உட்பட பல படங்களுக்கும் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறேன்.
இடையில் நடிப்பில் கவனம் செலுத்தியதால், பாடல் எழுதுவதை அதிகமாகத் தொடர முடியவில்லை. அதனால் நடிப்புக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தேன். இப்போது, மீண்டும் பாடலில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன்.

