நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா பற்றி தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவர் நலமாக உள்ளார், தயவு செய்து வீண் வதந்தியை பரப்பாதீர்கள் என நடிகர் அபி சரவணன் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
மண் மனம் மாறாத கிராமிய மனம் கமலும் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்தவர், மதுரையை சேர்ந்த பரவை முனியம்மா (83). சமீபகாலமாக கிட்னி பாதிப்பால், மிகவும் அவதிப்பட்டு வருகிறார். அரசிடம் அவர் பெறும் உதவித் தொகை மருத்துவ சிகிச்சைக்கே போதாத நிலையில், மிகவும் கடினமான சூழ்நிலையில், நாட்களை கடத்தி வருகிறார்.
நேற்று மதியம் ‛பரவை முனியம்மா, மூச்சு விடவே சிரமப்பட்டுள்ளார். இதை அறிந்து நடிகர் அபி சரவணன், அவரை உடனடியாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அவசரப்பிரிவில் சேர்த்துள்ளார். அவருக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டிருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
இந்நிலையில் இன்று(நவ.,1) மதியம் முதல் அவர் இறந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதுப்பற்றி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்த போது அவர் நலமாக இருப்பதாகவும், உடல்நிலையின் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே முனியம்மாவை, மருத்துவமனையில் சேர்த்த நடிகர் அபி சரவணன், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛‛மதுரை கோர்ட்டில் இருந்து பேசுகிறேன். காலையில் தான் பரவை முனியம்மா பாட்டியை சந்தித்தேன், நலமாக உள்ளார். எனக்கும், நடிகை அதிதிக்குமான விவாகரத்து தொடர்பாக கோர்ட்டுக்கு வந்தேன். இருப்பினும் இங்கிருந்து வீடியோ கால் மூலம் பேசினேன். அவர் நலமாக உள்ளார். தயவு செய்து தவறான வதந்தியை பரப்பாதீர்கள்” என கூறியிருக்கிறார்.

