இயக்குனர் பாரதிராஜ, தனது மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் ‛ஓம்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் வெளிநாட்டில் நடந்தது. 60 வயதை கடந்த முதியவருக்கும், ஒரு இளம் பெண்ணுக்குமான காதலும், பயணமும் தான் கதை. இதில் முதியவராக பாரதிராஜாவும், இளம் பெண்ணாக நட்சத்திராவும் நடித்தார்கள். இவர்கள் தவிர ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்திற்கு ‛ஓம்’ என்று தலைப்பு வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு காதல் கதைக்கு இந்துக்களின் புனித மந்திரச் சொல்லான ஓம் என்று எதற்கு டைட்டில் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இதனால் தற்போது படத்தின் டைட்டிலான ஓம் என்பதை மாற்றி மீண்டும் ஒரு மரியாதை என்று தலைப்பு வைத்திருக்கிறார். பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படமும் முதியவர் ஒருவருக்கும் இளம் பெண்ணுக்குமான காதல் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

