பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோத்தகி, சமூக வலைதளத்தில் மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். இது காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாயல் மீது, ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சர்மேஷ் ரமேஷ் போலீசில் புகார் செய்தார். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபரில் வழக்கு பதிவு செய்த ராஜஸ்தான் போலீசார், நடிகை பாயலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
அவர் பதிலளிக்கவில்லை, விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் ராஜஸ்தான் பண்டி நகர போலீசார், பாயலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவருக்கு 8 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று பாயல், பண்டி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான இருநபர் ஜாமினில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

