இந்தி திணிப்பு, நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களை பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ள நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவித்து வருகின்றன. திமுக சார்பில் ஜூலை 27ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 25ல் போராட்டம் நடைபெறும். மாநிலம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இந்தி திணிப்பை முன்எடுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. மேலும் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்த போராட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஒரு முறை மட்டுமே கட்ட வேண்டிய வரியா அல்லது வாங்கும் ஒவ்வொரு முறையும் கட்ட வேண்டிய வரியா என்பதை தெளிவு படுத்தவில்லை. ஜிஎஸ்டியால் தீப்பெட்டி, ஜவுளி, பட்டாசு தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது, எனவே ஜிஎஸ்டி வரியை பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக குடித்தை எடுத்துக் கொண்டு வீதிகளில் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டிலேயே அதிக சம்பளம் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு அறிவித்துள்ளது வெட்கக் கேடான விஷயம், என்றும் தா.பாண்டியன் கூறியுள்ளார்.