நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ… அரசியல் ஆர்வம் உடையவராகவே இருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூகக் கருத்துக்களையும், சமூக அவலங்களையும் கண்டிப்பது போல வசனம் பேசுவதையும், காட்சிகள் அமைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் விஜய், ‛கத்தி’ படத்தில் தண்ணீர் பிரச்னை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருந்தார்.
‛மெர்சல்’ படத்தில் மருத்து முறைகேடு மற்றும் ஜி.எஸ்.டி., குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அதேபோல ‛சர்கார்’ படத்தில் முழுக்க முழுக்க அரசியலே பேசினார். ஓட்டளிப்பதில் இருக்கும் முறைகேடுகளையெல்லாம் தோலுரித்து காட்டிய நடிகர் விஜய், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயன்றார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடக்கிறது. விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளியான புகைப்படங்களும் அதை உறுதி செய்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் கதை என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய கல்வி முறையை சாடும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளதாம். குறிப்பாக நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும், நீட்டிற்கு எதிரான காட்சி அமைப்புகளையும், வசனங்களும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

