நாளை நடைபெறவிருந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்தை அதிமுக அம்மா அணி கைவிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் அதிமுக அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அவர் கூறியதாவது:
திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். நாங்களோ ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். உச்சநீதிமன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்துவிட்டதால் நாளை எங்களால் அதை நடத்த முடியவில்லை. பொதுக்கூட்டத்திற்கு பிரச்சினை இல்லை என நினைத்து திமுக அதை நடத்தியிருக்கலாம். தமிழகத்தில் சமூக நீதியை காப்பாற்றும் பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது. நீட் தேர்வை கொண்டுவந்தது மத்திய அரசு. எனவே அவர்கள் அதை பரிசீலனை செய்து தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. முதல்வரை மாற்றும் முதல்கட்ட நடவடிக்கைதான், ஆளுநருடனான எங்கள் சந்திப்பு. 21 எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை சந்தித்தேன். எடப்பாடி அரசுக்கு அறுதி பெரும்பான்மை இல்லை என்று கூறியுள்ளேன். ஆளுநர் மூலமாகத்தான் இதை செய்ய வேண்டும். எடப்பாடிக்கு பெரும்பான்மை இல்லை. அவர் இறுக்கமாக நாற்காலியை பிடித்து வைத்துக்கொண்டுள்ளார். அவரை தூக்கி எறியத்தான் ஆளுநரை சந்தித்தோம். ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நினைத்து காத்திருக்கிறோம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.