கடந்த 2012ம் ஆண்டு டில்லியில் நிர்பயா என்ற மாணவி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஓடும் பஸ்சில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் சிறுவன் இதனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டான். மீதமுள்ளவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதில் ஒருவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவத்தை மையமாக வைத்து பாலிவுட் சினிமா தயாரானது. நிறைய ஆவணப்படங்களும் தயாரானது.
தற்போது இந்த சம்பவத்தை மையமாக வைத்து டில்லி க்ரைம் என்ற வெப் சீரிஸ் தயாராகி உள்ளது. இதில் ஷிபாலி ஷா என்பவர் நிர்பயாவாக நடித்துள்ளார். அவரது காதலனாக லைப் ஆப் பை படத்தில் நடித்த அடில் ஹூசைன் நடித்துள்ளார். இவர்கள் தவிர டென்சில் ஸ்மித், ராஷிகா டுகல், ராஜேஷ் தைலங், யாஷாஸ்வினி டயானா ஆகியோர் நடித்துள்ளனர். இதனை கனடாவில் வாழும் இந்தியர் ரிச்சி மேத்தா இயக்கி உள்ளார். இது 7 மணி நேரம் கொண்ட வெப் சீரிசாகும். இது 7 எபிசோட்களாக மார்ச் 22ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

