ஆந்திர மாநிலம் ஹைதராபாத் தலைநகரில் போதைப்பொருள் சிக்கிய விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவியர் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் 12 பேரை ஹைதராபாத் கலால் துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களின் செல்போனில் பதிவாகியிருந்த எண்களை வைத்து தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதில் நடிகைகள் சார்மி, முமைத்கான், நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், தனீஷ், நந்து, சுப்பராஜு, இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே. நாயுடு, கலை இயக்குனர் சின்னா மற்றும் ரவிதேஜாவின் கார் ஓட்டுநர் ஸ்ரீநிவாச ராவ் ஆகிய 12 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் வரும் 19-ம் தேதி முதல் 27-ம் தேதிக்குள் ஹைதரா பாத்தில் உள்ள கலால் துறை விசாரணை குழு முன் ஆஜராக வேண்டி உள்ளது. இவர்கள் போதைப்பொருளை உபயோகித் தனரா? அல்லது விற்பனைக்கு உறுதுணையாக இருந்தார்களா? என்பது பின்னர்தான் தெரிய வரும். இதில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுவதால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.