2018ம் ஆண்டின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக அமைந்த படம் விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த ’96’. அந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து அனைவரும் கொண்டாடும் படமாக அமைந்தது. தமிழ் சினிமா வரலாற்றில் அந்தப் படத்திற்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது.
அப்படிப்பட்ட படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து ‘ஜானு’ என்ற பெயரில் கடந்த வாரம் வெளியிட்டார்கள். நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லையாம். இதுவரை சுமார் 7 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். படத்தின் வியாபாரம் மட்டும் 21 கோடி வரை நடந்துள்ளது. இன்னும் 14 கோடி வசூலித்தால் தான் படத்தின் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள்.
இப்படத்திற்காக எந்த பேட்டியையும் படத்தின் நாயகன் சர்வானந்த் கொடுக்கவில்லை. எப்படியும் தன்னுடைய நடிப்பை விஜய் சேதுபதியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். எதற்கு வம்பு என அவர் பேட்டிகளைத் தவிர்த்தாராம். அவர் எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் சமந்தா கூட த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார். ஆனாலும், அவரை சம்மதிக்க வைத்தார்கள். இப்போது சமந்தாவுக்கும் சிக்கலாகிவிட்டது. தெலுங்கு ரசிகர்கள் ’96’ படத்துடன் ‘ஜானு’ படத்தை ஒப்பிட்டதன் விளைவுதான் படத்தின் ரிசல்ட் இப்படியாகிவிட்டது என்கிறார்கள்.

