இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், 49 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த இந்தியாவின் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், அதிக முறை ‘நாட்–அவுட்’ பேட்ஸ்மேனாக இருந்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார். இவர், 300 போட்டிகளில் 73 முறை ‘டாட்–அவுட்’ பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.
இவரை அடுத்து இலங்கையின் சமிந்தா வாஸ், தென் ஆப்ரிக்காவின் போலக் தலா 72 போட்டிகளில் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
300வது போட்டி: இலங்கைக்கு எதிரான 4வது போட்டி, இந்தியாவின் தோனி பங்கேற்ற 300வது ஒருநாள் போட்டி. இதன்மூலம் 300 அல்லது அதற்கு மேல் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 6வது இந்திய வீரர் மற்றும் 20வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார்.
★ தவிர இவர், 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய விக்கெட் கீப்பர், சர்வதேச அளவில் 2வது விக்கெட் கீப்பர் ஆனார்.
இலங்கையுடன் மோதல்: இந்திய அணி வீரர் தோனி. தனது 100 (2008 ல்), 200 வது (2012) ஒருநாள் போட்டிகளை இலங்கைக்கு எதிராக விளையாடினார். தற்போது, இவரது 300வது ஓருநாள் போட்டியும், இந்த அணிக்கு எதிராக களமிறங்கியது, அபூர்வம் தான்.
பிளாட்டினம் ‘பேட்’
300வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனிக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பிளாட்டினத்தினால் ஆன ‘பேட்’ வழங்கப்பட்டது. போட்டி துவங்கும் முன், கேப்டன கோஹ்லி, தோனிக்கு இதை வழங்கினார்.