தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, அங்கும் ஓரளவிற்கு வசூலைப் பெற்று லாபத்தைக் கொடுக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப் படங்களுக்கான தெலுங்கு டப்பிங் மார்க்கெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பிச்சகாடு என்ற பெயரில் டப்பிங் ஆகி அங்கு 50 லட்சத்திற்கு மட்டுமே விற்கப்பட்டு 25 கோடிக்கும் அதிகமா வசூலித்து சாதனை படைத்தது. அதன் பின் காஞ்சனா 3 படம் மட்டும் சுமார் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. கார்த்தி நடித்து தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று தெலுங்கில் காக்கி என டப்பிங் செய்யப்பட்டு 5 கோடிக்கும் கூடுதலாக மட்டுமே வசூலித்து, கார்த்தியின் அதிகபட்ச தெலுங்கு டப்பிங் வசூல் அதுதான் என்கிறார்கள்.
கடந்த 3 வருடங்களில் வேறு எந்தப் படமும் அந்த அளவிற்கு வசூலிக்கவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் ஆகியோரது படங்கள் லாபத்தைக் கொடுக்காமல் தோல்வியைத் தழுவின.
ரஜினிகாந்த் நடித்த டப்பிங் படங்களுக்கு தனி மார்க்கெட் இருக்கும். ஆனால், கபாலி, காலா, 2.0, பேட்ட, படங்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன.
நேரடித் தெலுங்குப் படங்களில் நடித்து சிறந்த நடிகர் என தெலுங்கிலும் பெயரெடுத்த கமல்ஹாசனுக்கு கடைசியாக வெளிவந்த விஸ்வரூபம் 2 படம் கூட அங்கு தோல்வியைத்தான் கொடுத்தது.
சூர்யாவிற்கு கஜினி படத்திற்குப் பிறகு அங்கு நல்ல மார்க்கெட் இருந்தது. 20 கோடி ரூபாய் வரை அவரது படங்களுக்கான வியாபாரம் இருந்தது. ஆனால், தற்போது 5 கோடி ரூபாய் கொடுத்து கூட அவரது படங்களை வாங்கத் தயங்குகிறார்களாம்.
அஜித் படங்கள் இதுவரையில் அங்கு டப்பிங் செய்து வெற்றி பெற்றதேயில்லை. விஜய் படங்களாவது கொஞ்சம் தாக்குப் பிடித்திருக்கிறது என்கிறார்கள். அடுத்து பிகில் படத்தையும் அங்கு டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
தமிழில் விஷால், தெலுங்கில் விஷால் ரெட்டி எனப் பெயர் வைத்துக் கொண்டாலும் அவருக்கும் வசூலில்லை.
நடிகர்களின் படங்களுக்குத்தான் அப்படி ஒரு வசூல் நிலவரம், தமிழில் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ் ஆகியோரது படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் போதும் அதற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கும். அதுவும் கடந்த சில வருடங்களில் நிகழாமல் போயிருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று விசாத்தால் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு சினிமா, தமிழ் சினிமாவை விட உயர்ந்துவிட்டது. தமிழை விட தெலுங்கில் பிரம்மாண்டமான படங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் அதிகம் வர ஆரம்பித்துவிட்டன.
தமிழ்ப் படங்களை விட தெலுங்குப் படங்கள் தரமான படங்களாக இந்திய அளவில் பெயர் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளன. பாகுபலி, பாகுபலி 2, சாஹோ, சைரா, ஆகிய பிரம்மாண்டமான படங்கள் தெலுங்குத் திரையுலகத்திற்கு அதிக புகழைத் தந்துள்ளன. மேலும், தென்னிந்திய அளவில் மட்டுமே டப்பிங் ஆகி வெளியாகி வந்த தெலுங்குப் படங்கள், ஹிந்தியிலும் டப்பிங் ஆகி அந்த ரசிகர்கள் ரசிக்கும் விதத்திலும் உருவாக்கப்படுகின்றன. தமிழை விட தெலுங்கில் இயக்குனர்களின் பார்வை விரிவடைந்துள்ளது என்று பல காரணங்களைத் தெரிவிக்கிறார்கள்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் முன்பு தரமான விருதுகளைக் குவிக்கும் படங்களாக மலையாளப் படங்களும், கமர்ஷியல் ரீதியாகவும், தர ரீதியாகவும் பெரிய வெற்றிப் படங்களாக தமிழ்ப் படங்களும், முழுக்க முழுக்க கமர்ஷியல் ரீதியான படங்களாக தெலுங்குப் படங்கள் மட்டுமே இருக்கும் என்ற கருத்து நிலவியது.
இப்போது பாகுபலி, சாஹோ, சைரா ஆகிய படங்களுடன் மேலும் சில படங்களும் அந்தக் கருத்தை மாற்றி சர்வதேச அளவிலும் சவால் விடக் கூடிய படங்களை கமர்ஷியல் ரீதியாகவும், தர ரீதியாகவும் தெலுங்கிலும் தர முடியும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்துவிட்டர்கள்.
அதே சமயம், இந்த கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் அப்படியான படங்கள் வராமல் போனதும் தெலுங்கு சினிமா வீறு கொண்டு எழக் காரணமாகிவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
ஷங்கர், ராஜமவுலி இருவரிடையேயான ஒப்பீடே தவறு என ராஜமௌலியே கூறினாலும் பாகுபலி 2 படைத்த சாதனையை 2.0 படத்தால் செய்ய முடியவில்லை. அடுத்து ஆர்ஆர்ஆர் என அடுத்த பிரம்மாண்டத்திற்கு ராஜமவுலி போய்க் கொண்டிருக்கிறார்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் சரித்திரப் படம் எடுக்கும் யோசனை வந்திருக்கிறது. அதுவும் பாகுபலி வெற்றி கொடுத்த தாக்கத்தின் காரணமாகத்தான் மணிரத்னம் கூட பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கிறார் என்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகினர் சொல்வதிலும் சில உண்மை இருக்கிறது. தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா இப்போது முன்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது. தமிழில் தங்களையும் சிறந்த இயக்குனர்கள் நடிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இல்லை என்றால் தென்னிந்திய சினிமா என்றால் இனி தெலுங்கு சினிமா என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

