தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரும் தெலுங்கில் நேரடிப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஆரம்ப காலத்திலேயே நேரடித் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்கள்.
இன்றைய தலைமுறை நடிகர்களில், அஜித் முதன்முதலில் நாயகனாக அறிமுகமானது ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படத்தில்தான். கார்த்தி தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்ட ‘தோழா/ஊப்பிரி’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அப்படத்திற்காக சொந்தக் குரலிலும் தெலுங்கில் டப்பிங் பேசினார். விஜய் சேதுபதி ‘சைரா’ படம் மூலம் அறிமுகமாகிறார்.
சூர்யா நடித்த சில தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கும் நீண்ட நாட்களாகவே நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்க ஆசையாம். சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக ஐதராபாத்தில் இருந்தவர், தெலுங்கு கதையாசிரியர்கள் சிலரிடம் கதையைக் கேட்டாராம். அவற்றில் ஒரு கதை அவருக்குப் பிடித்துவிட்டதாம். அடுத்த கட்ட பேச்சு வார்த்தையும் சரியாக நடந்தால் சூர்யா தெலுங்கில் அறிமுகமாகலாம்.

