ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டவுனில் நடக்கும் 3வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் மார்க்ரம் அரைசதம் கடந்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி முன்னிலை பெற்றது.
தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 311 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. பெய்ன் (33), ஹேசல்வுட் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (10), ரபாடா ‘வேகத்தில்’ வெளியேறினார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 255 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பெய்ன் (34) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா, மார்னே மார்கல் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின், 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு டீன் எல்கர் (14) ஏமாற்றினார். ஆம்லா (31) ஆறுதல் தந்தார். பொறுப்பாக ஆடிய மார்க்ரம் (84) அரைசதம் கடந்தார்.
தேநீர் இடைவேளையின் போது 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 3 விக்கெட்டுக்கு, 151 ரன்கள் எடுத்து, 207 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. டிவிலியர்ஸ் (18), கேப்டன் டுபிளசி (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
கேப்டவுன் டெஸ்டில் உணவு இடைவேளைக்குப் பின், விக்கெட் வீழ்த்த திணறினர் ஆஸ்திரேலிய வீரர்கள். அப்போது, துவக்க வீரர் பான்கிராப்ட், கையில் மஞ்சள் நிறத்தினால் ஆன ஒரு பொருளை, பந்துடன் சேர்த்து வைத்து தேய்த்தார். பிறகு பந்தை கொடுத்து விட்டு, அதை தனது பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார்.
இதை அம்பயர்கள் பார்த்ததாக தெரிகிறது. இதனால் சுதாரித்த பான்கிராப்ட், அந்த பொருளை எடுத்து, தனது பேன்ட் முன் பகுதியில் மறைத்தார். இருப்பினும், பாக்கெட்டில் என்ன உள்ளது என்பது குறிதது அம்பயர்கள் பான்கிராப்டிடம் கேட்டனர்.
இதற்குள், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் உடன் இணைந்து கொண்டார். பாக்கெட்டுக்குள் கையை விட்டு, கறுப்பு நிற சிறிய துணியை வெளியே எடுத்து, இது தான் உள்ளது என்பது போல காட்டினார். இருப்பினும், பான்கிராப்ட் வைத்திருந்த மர்ம பொருள், அதை அவர் மறைத்தது, பந்தை தேய்த்தது என, பல வீடியோக்கள், அடுத்த சில நிமிடங்களில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி விட்டன.