தமிழ் திரையுலகத்தில் நிலவி வரும் ஸ்டிரைக் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியிருக்கிறார் விஷால்.
டிஜிட்டல் சேவை கட்டணத்தை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் போராட்டம் நடத்தி வருகின்றன. புதிய படங்கள் வெளியாகவில்லை, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டமும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையும் இழந்துள்ளனர்.
இந்த ஸ்டிரைக் காரணமாக பல படங்களின் ரிலீஸூம் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினியின் காலா படமும் ஒன்று. காலா ரிலீஸ் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் தடையில்லா அனுமதிக் கடிதம் வழங்கவில்லை. இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் அங்கு பிரச்னை ஏற்பட்டதாக செய்தி வந்தது. இந்நிலையில் இந்த விஷயத்தில் ரஜினியை சந்தித்து பேச இருப்பதாக விஷால் கூறியிருந்தார்.
அதன்படி ரஜினியை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் விஷால் சந்தித்து பேசி உள்ளார். திரையுலகம் ஸ்டிரைக் குறித்தும், காலா பட ரிலீஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
திரையுலகம் ஸ்டிரைக் தொடர்பாக விஷால் ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.