ஹிந்தித் திரையுலகின் சர்ச்சை நாயகியாக இருந்தாலும் தன்னுடைய வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் கங்கனா ரணவத்.
தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார்.
கங்கனா நடித்துள்ள ‘பங்கா’ படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அஷ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கபடி விளையாட்டு வீராங்கனையாக கங்கனா நடித்துள்ளார்.
ஒரு கபடி வீராங்கனை திருமணமாகி குழந்தை பெற்ற பின்பு மீண்டும் விளையாட ஆரம்பித்து, இந்திய அணியில் இடம் பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதை.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் விளையாட்டில் ஈடுபட்டால் அவரது வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கின்றன என்பதை யதார்த்தமாகச் சொல்லும் படம் இது.
கபடி வீராங்கனையாக, மனைவியாக, அம்மாவாக கங்கனாவின் நடிப்பு டிரைலரிலேயே வியக்க வைக்கிறது. அவருடைய நடிப்பிற்கு டிரைலரைப் பார்த்தே பல ஹிந்திப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
24 மணிநேரத்திற்குள்ளாகவே யு-டியூப்பில் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. ஜனவரி 24, 2020ல் வெளிவர உள்ள இந்தப் படம் மீது இப்போதே எதிர்பார்ப்பு வந்துவிட்டது.

