தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நடிகர் பார்த்திபன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.
விஷால் தலைமையிலான நிர்வாகிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பு வகித்து வருகின்றனர். பார்த்திபன் துணை தலைவராக சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார்.
தற்போது, தயாரிப்பாளர்கள் சங்கம், நாளையும், நாளை மறுநாளும் நடத்த இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளது. இந்நிலையில், இளையராஜா நிகழ்ச்சி விஷயத்தில் தனது பதவிக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும், இதனால் நிலவி வந்த அதிருப்தி காரணமாக பார்த்திபன், துணை தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும், அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கம் பார்த்திபனின் ராஜினாமாவை ஏற்கவில்லை. இது சின்ன பிரச்னை தான் என்றும், அவரை சமாதானம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. நாளை நடைபெற இருக்கும் இளையராஜா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றால், பதவியில் அவர் தொடருவார் என்றும், ஒருவேளை பங்கேற்கவில்லை என்றால், ராஜினமா உறுதி என எடுத்துக்கொள்ளலாம் என தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் கூறுகின்றனர்.
ஏற்கனவே விஷால் மற்றும் உயர்நிலையில் இருக்கும் நிர்வாகிகள் மீதான அதிருப்தி காரணமாக செயற்குழு உறுப்பினர்களாக இருந்த ஆர்கே.சுரேஷ், உதயா மற்றும் எஸ்எஸ்.குமரன் ஆகியோர் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

