தமிழ் சினிமாவில் புதிதாக தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, இயக்குனர்கள் சங்கம் என, பல சங்கங்கள் உள்ளன. இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம், புதிதாக உருவாகியுள்ளது. இதன் துவக்க விழா, சென்னையில் நடந்தது.
சங்கத்தின் கவுரவ ஆலோசகர்களாக இயக்குனர் பிரபு சாலமன், டி.ஜி.தியாகராஜன், நடிகை அர்ச்சனா, மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் உள்ளனர். கவுரவ வழிகாட்டியாக நடிகரும், இயக்குனருமான, கே.பாக்யராஜ், சங்க தலைவராக மனோஜ் கிருஷ்ணா, செயலராக ஜெனிபர் சுதர்சன், பொருளாளராக வேல்ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழாவில், நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது: நடிக்க வாய்ப்பு தேடுவோருக்கும், நடித்து கொண்டிருப்போருக்கும், மேலாளர்கள் மிகவும் அவசியம். அப்படிப்பட்ட மேலாளர்கள் சங்கமாக செயல்படுவது, தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோல, காஸ்டிங் டைரக்டர் பணி, தமிழ் சினிமாவில் இன்னும் முக்கியத்துவம் பெறவில்லை. இனி, அந்த வேலையும் முக்கியமானதாக மாறும். இந்த சங்கத்தினருக்கு, என் ஆதரவு எப்போதும் உண்டு என்றார்.
விழாவில் பாக்யராஜ், ராதாரவி, அஸ்வின், அசோக், கவுதமி, தேஜாஸ்ரீ, நமீதா, சாக்ஷி அகர்வால், அர்ச்சனா உட்பட, திரைத்துறையினர் பலர் பங்கேற்றனர்.

