தமிழ்நாட்டில் கட்-அவுட், பேனர்கள் வைக்க ஏற்கெனவே தடை விதித்திருந்தார்கள். இருப்பினும் அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்கள் அவற்றை வைத்துக் கொண்டு தான் இருந்தார்கள். கடந்த மாதம் பேனர் விழுந்து விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ மறைவுக்குப் பின் தமிழ்நாட்டில் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கப்படுவதில்லை.
புதிய படங்கள் வந்த போதும் அதற்குப் பதிலாக வேறு நலத்திட்ட உதவிகளை ரசிகர்கள் செய்து வருகிறார்கள். ஆனால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கட்-அவுட் பேனர்கள் வைப்பதற்குத் தடையில்லை. தமிழில் விஜய் நடித்து வெளியாக உள்ள ‘பிகில்’ படம், தெலுங்கில் ‘விசில்’ என்ற பெயரில் தெலுங்கு மாநிலங்களில் வெளியாகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் படத்தை முதல் முறையாக 700 தியேட்டர்கள் வரை வெளியிடுகிறார்களாம்.
ஐதராபாத்தின் புகழ் பெற்ற ஆர்டிசி எக்ஸ் ரோடில் அமைந்துள்ள சந்தியா தியேட்டரில் விஜய்யின் 50 அடி உயர கட்அவுட்டை வைத்துள்ளார்களாம். இதுவரையில் தெலுங்கு நடிகர்களுக்குத்தான் அப்படி கட்அவுட் வைக்கப்படுமாம். முதல் முறையாக விஜய்க்கு அவ்வளவு உயர கட் வைத்துள்ளது பற்றி டோலிவுட்டில் ஆச்சரியப்படுகிறார்களாம்.

