மும்பை அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி, லீக் போட்டியில் தமிழக அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இந்தியாவில், விஜய் ஹசாரே (50 ஓவர்) உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள ‘நடப்பு சாம்பியன்’ தமிழக அணி, முதல் போட்டியில் குஜராத்தை வென்றது. அடுத்து கோவாவிடம் தோற்ற தமிழக அணி, 3வது போட்டியில் மும்பை அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அஷ்வின் நம்பிக்கை: தமிழக அணிக்கு எதுவுமே சிறப்பாக அமையவில்லை. கவுஷிக் ‘டக்’ அவுட்டாக, கங்கா (12), அனிருத் (27), பாபா அபராஜித் (19), கேப்டன் விஜய் ஷங்கர் (11) என, வரிசையாக அணியை கைவிட்டனர். அஷ்வின் (41), ஜெகதீசன் (31) சற்று நம்பிக்கை தந்தனர்.
வாஷிங்டன் சுந்தரும் ‘டக்’ அவுட்டாக, தமிழக அணி 49.3 ஓவரில், 183 ரன்களுக்கு சுருண்டது. மும்பை சார்பில் குல்கர்னி, அதிகபட்சம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எளிய இலக்கைத் துரத்திய மும்பை அணி துவக்க வீரர்கள் பிரிதிவி ஷா (9), ஹெர்வத்கர் (18) இருவரும், விக்னேஷ் ‘வேகத்தில்’ சிக்கினர். சுழலில் அசத்திய அஷ்வின், தன் பங்கிற்கு சூர்யகுமார் (21), கேப்டன் ஆதித்ய தாரே (17), துபேவை (28) வீழ்த்தினார்.
இருப்பினும், ரஞ்ஜனே (59) அரைசதம் விளாச தமிழக அணியின் தோல்வி உறுதியானது.
மும்பை அணி 48.5 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘சீனியர்’ அஷ்வின், அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.
நான்காவது லீக் போட்டியில் (பிப். 9) , தமிழக அணி, மத்திய பிரதேசத்தை சந்திக்கிறது.