‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’. இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றை படத்தின் நாயகன் தனுஷ் இன்று(ஜன., 28) டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தில் தனுஷ் ஒரு மலை மீது நீளமான கத்தி ஒன்றுடன் நிற்கிறார்.
தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் வன்முறைக் காட்சிகள் பரவலாக உள்ள படங்கள் வருவது அதிகரித்துவிட்டது. சண்டைக் காட்சிகளைக் கூட ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், கத்தி, கொலை, ரத்தம் என பழி வாங்கும் உணர்ச்சி கொண்ட படங்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதல்ல.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் காதலை மையமாக வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் ‘கர்ணன்’ படத்தில் வன்முறையையும் கையில் எடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

