நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி இருக்கும் சப்பாக் திரைப்படம், தனது நோக்கத்தை அடைந்துள்ளது என அத்திரைப்படத்தின் இயக்குநர் மேக்னா தெரிவித்துள்ளார். நடிகை தீபிகா படுகோன் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகி வெளியான திரைப்படம் சப்பாக். ஆசிட் வீச்சு பாதிப்புக்கு உள்ளான டில்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வாலின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கூறப்பட்ட கருத்தால் ஈர்க்கப்பட்டு, உத்ரகண்ட் அரசு, தனது மாநிலத்தில், ஒரு புது திட்டத்தையே அறிவித்திருக்கிறது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பென்சன் திட்டத்தை உத்ரகண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து, சப்பாக திரைப்படம், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றி, புதிய மாற்றத்துக்கு வித்திட்டிருப்பதாக, படத்தின் இயக்குநர் மேக்னா தெரிவித்துள்ளார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரையில் பென்சன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை, துரித கதியில் அரசு செயல்படுத்தி வருகிறது என மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார்.
சப்பாக் திரைப்படத்துக்கு புதுச்சேரி, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் ஏற்கனவே வரிவிலக்கு அறிவிப்பை வெளியிட்டிருந்தன.

