கதையம்சம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகர் என நிரூபித்த மலையாள நடிகர் டொவினோ தாமஸ், தற்போது ஆக்சன் படங்கள் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். அந்தவகையில் கடந்த மாதம் அவரது நடிப்பில் வெளியான கல்கி என்கிற அதிரடி போலீஸ் படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது மின்னல் முரளி என்கிற படத்தில் நடித்து வருகிறார் டொவினோ தாமஸ்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டொவினோ மற்றும் வாமிகா நடித்த குத்து சண்டையை மையப்படுத்தி உருவாகி இருந்த ‘கோதா’ என்கிற படத்தை இயக்கிய பசில் ஜோசப் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். வழக்கமான படங்களின் சண்டைக் காட்சிகள் போல மின்னல் முரளி படத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகவே பிரபல ஹாலிவுட் சண்டை பயிற்சியாளரான வலாட் ரிம்பர்க் என்பவரை அழைத்து வந்து இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருகிறார்..
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய இவர், இந்தியாவில் பாகுபலி-2, சுல்தான், சமீபத்தில் வெளியான பயில்வான் உள்ளிட்ட படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

