டில்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்கட்சியாக பா.ஜ., அமர்ந்திருக்கிறது. ஆனால், காங்கிரசுக்கு அங்கே ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு, தேர்தல் முடிவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
டில்லியில் பெரிய அளவில் மேஜிக் நடக்கும் என காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கவில்லைதான். காங்கிரஸ் அங்கே முழுமையாக நசுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம் எப்படியாவது மீள வேண்டும். நாம் சரியாகத்தான் செய்கிறோமா? சரியான பாதையில் தான் பயணிக்கிறோமா என்பது குறித்தெல்லாம் யோசித்தால், எல்லாவற்றுக்கு ஒரே பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். அதனால், இனிமேலாவது நாம் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். அதையும் உடனே செய்ய வேண்டும். இப்போதைக்கு இல்லை என்றால், இனி எப்போதைக்கும் இல்லை. கட்சியின் கீழ், நடு, மேல்மட்டம் என எல்லா நிலைகளிலும் மாற்றம் வந்தாக வேண்டும். கட்சியில் சரியான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்த தேர்தல் மூலம் ஒருவிதத்தில் நல்லது நடந்திருக்கிறது. மோடி கும்பலையும் சேர்த்து முடக்கி இருக்கின்றனர் மக்கள். இதை சாதித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.

