இயக்குநர் தமிழ்வாணன் இயக்க, எஸ்.ஜே.சூர்யா பிரதான கேரக்டரில் நடிக்க, உருவாகும் புதிய படம் உயர்ந்த மனிதன். இந்தப் படத்தில் நடிகர் அமிதாபச்சனும், முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில், அமிதாப் நடிக்க ஒப்புக் கொண்டது எப்படி என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்தத் தகவல்; இந்தப் படத்திற்குப் பொருத்தமான தலைப்பு – உயர்ந்த மனிதன் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த தலைப்பில் ஏற்கனவே, சிவாஜி நடித்து ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதனால், அந்த பெயரை வைத்தால், படத்தை தயாரித்த ஏவி.எம்., நிறுவனம், பின், வம்புக்கு வரலாம் என்பதால், அந்நிறுவனத்திடம் அனுமதி கேட்டு ஓப்புதல் பெற்று, அதன்பின்பே, படத்துக்கு உயர்ந்த மனிதன் என, அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. படத்தில், அமிதாப்பச்சன் நடிக்கப் போகிறார் என கூறியதால், ஏவி.எம்., நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
அதன்பின் தான், அமிதாப்பச்சனுக்கு, கதையைச் சொல்லி, நடிக்கக் கேட்டுள்ளனர். கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மனைவி ஜெயா பச்சனிடமும், மகன் அபிஷேக்பச்சனிடமும் கேட்டு விட்டு சொல்கிறேன். இரு நாட்கள் நேரம் தேவை என கூறியிருக்கிறார் அமிதாப். இரு நாட்களுக்குப் பின், அவர்கள் இருவரும், ஓகே சொல்லி விட்டனர் என எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறியுள்ளார் அமிதாப்.
அப்போது இயக்குநர் தமிழ்வாணனிடம் அமிதாப் ஒரு கேள்வி கேட்டுள்ளார். இந்தப் படத்தில், நான் நடிக்க வில்லையென்றால், என்ன செய்வீர்கள்? என கேட்கவும், இயக்குநர், படத்தை எடுப்பது குறித்து யோசிக்க வேண்டும் என பளிச்சென பதில் கூறியிருக்கிறார்.பதறிய அமிதாப், அப்படியெல்லாம் யோசிக்க வேண்டாம். நானே, நடிக்கிறேன் என உறுதி அளித்திருக்கிறார்.
இதற்கிடையில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக, உயர்ந்த மனிதன் படத்தில், ஜோதிகாவை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்து, அவரை அணுகி உள்ளனர். ஆனால், அவர் யோசித்து சொல்வதாக கூறி விட்டார். இதனால், படக் குழு அப்செட்டாகி விட்டது. ஆனாலும், ஜோதிகா தரப்பில் தொடர்ந்து படக் குழுவினர் பேசி வருகின்றனர். நல்ல செய்தி ஜோதிகாவிடம் இருந்து வரும் என காத்திருக்கின்றனர்.

