தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்றிருந்த இந்திய அணி, கேப்டவுனில் நடந்த மூன்றாவது போட்டியில், 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது.
சகால், குல்தீப் ‘சுழலில்’ சிக்கிய தென் ஆப்ரிக்க அணி, 40 ஓவரில் 179 ரன்களுக்கு சுருண்டு வீழ்ந்தது. இதையடுத்து, தென் ஆப்ரிக்க மண்ணில் தொடரை, முதன் முறையாக சமன் செய்வதை உறுதி செய்து, வரலாறு படைத்தது. இந்த மூன்று போட்டிகளில், இந்திய அணி கேப்டன் கோஹ்லி, 112, 46, 160 என, இரு முறை சதம் அடித்தார்.
இது குறித்து கோஹ்லி, 29, கூறியது:
வரும் நவம்பர் மாதம் 30 வயதை எட்ட உள்ளேன். ஆனால், கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் இன்னும் குறையவில்லை. அடுத்து 34, 35 வயதிலும் இதே வேகத்துடன் விளையாட விரும்புகிறேன். இதனால் தான், அதிகமான பயிற்சிகளில் ஈடுபடுகிறேன்.
ஒருவேளை, ரன்கள் குவிக்க வேண்டும் என்ற ஆர்வம், வேகம் குறைந்து போனால், களத்தில் எப்படி செயல்படப் போகிறேன் என்றே தெரியவில்லை. இது போன்று நடந்து விடாமல் இருக்க, என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன். உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவேன். இப்போது போல, வரும் காலத்திலும் அது தான் கைகொடுக்கும்.
மாற்றம் முக்கியம்: சர்வதேச அரங்கில் ரன் சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லை. சில நேரங்களில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரை துவக்கத்தில் எதிரணியின் பந்து வீச்சில் வேகம், பவுன்சர் அதிகம் இருக்கும். இதற்கு ஏற்ப, அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
30 ஓவருக்குப் பின் ஆடுகளத்தில் மாற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் மீண்டும் பேட்டிங் ‘ஸ்டைலில்’ மாற்றம் கொண்டு வர வேண்டும். இப்படி, சூழ்நிலைக்கு தகுந்து மாற்றிக் கொள்வது முக்கியம்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 90 ரன்கள் எடுத்தபோது, களைப்பாகி விட்டேன். மறுபக்கம் விக்கெட்டுகளும் சரிந்தன. இதனால், சற்று அடித்து விளையாடினேன். உடல் அளவில் சோர்வு இருந்தாலும், ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அணிக்காக செயல்பட்டேன். இந்த உணர்வு வித்தியாசமாக இருந்தது.
திட்டம் எப்படி: மூன்றாவது போட்டியில், ஷிகர் தவான் பவுண்டரியாக அடித்தார். நான், ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தேன். இவர், ஆட்டமிழந்தவுடன், இந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். எனக்குப் பின் மற்றொரு வீரர், இதை தொடர்வார். இப்படித்தான், முதலில் ‘பேட்டிங்’ செய்தால், திட்டமிட்டு விளையாடுவோம். சில நேரங்களில், நமது எதிர்பார்ப்புக்கு மாறாக நடக்கவும் வாய்ப்புள்ளது.
அதே நேரம், ‘சேஸ்’ செய்யும் போது, எதிரணியின் இலக்கு தெரிந்துவிடும். ஓரிரு ரன்கள் எடுப்பது எப்போது, அடித்து விளையாடுவது எப்போது என, திட்டமிட வேண்டும். இரு வேறுபட்ட தருணங்களில், வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
துாரம் அதிகம்: ஜோகனஸ்பர்க் டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி என தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்றுள்ளோம். தென் ஆப்ரிக்க மண்ணில் இப்படி சாதிப்பது மிகவும் கடினம். இதனால், ஒட்டுமொத்த இந்திய அணியை எண்ணி பெருமை கொள்கிறேன். இன்னும் 3 ஒரு நாள் போட்டி மீதமுள்ள நிலையில், செல்ல வேண்டிய துாரம் அதிகமாக உள்ளது. இதனால், தொடரை முழுவதுமாக கைப்பற்றுவது குறித்து தற்போது கூற முடியாது. நான்காவது போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு கோஹ்லி கூறினார்.