தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று நடைபெற்றது. வழக்கமாக தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். ஆனால், புதுச்சேரியில் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றதால், இந்த முறை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார்.
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தனக்கு காய்ச்சல் காரணமாக பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்நதால் விழாவில் அவர் பங்கேற்கவில்லை என அமிதாப் கூறினார்.
இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விருந்தில் விருது வழங்க இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛உடல்நலக்குறைவு காரணமாக தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமிதாப் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் விருது பெற்ற கலைஞர்களுக்கு டிச.,29ல் ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்த், தேநீர் விருந்தளிக்கிறார். அப்போது, அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிப்பார்” என்றார்.

