கண்டியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் இலங்கை அணி 3-0 என்று வாஷ் அவுட் செய்துள்ளது இந்திய அணி.
காலேயில் நடந்த முதல் டெஸ்ட் மற்றும் கொழும்பில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் போட்டி கண்டியில் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் தவான் அபாரமாக விளையாடி 119 ரன்களும், ராகுல் 85 ரன்களும், பாண்டியா 108 ரன்களும் விளாசினர். முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் சண்டகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. குல்தீப் யாதவின் சுழல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 135 ரன்களுக்கு ஆட்டம் இழந்து பாலோ- ஆன் ஆனது. அந்த அணியில் சண்டிமால் அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் முகமது சமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளும் பாண்டியா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பாலோ-ஆனைத் தொடர்ந்து இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அஸ்வின், சமி ஆகியோரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிக்வெல்லா 41 ரன்களும் சண்டிமால் 36 ரன்களும் மேத்யூவ் 35 ரன்களும் மற்ற வீரர்கள் மிகக் குறைந்த ரன்களில் வீழ்ந்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் முகமது சமி 3 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வாஷ் அவுட் செய்துள்ளது, இந்திய ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சொந்த மண்ணில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களைக் கொதிப்படைய வைத்துள்ளது.