சீனாவை எதிர்க்கும் சக்தி இந்தியாவிடம் உள்ளது என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் முதன் முறையாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநில எல்லையில், பூடானை ஒட்டிய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்தது. இதனை எதிர்த்து, இந்திய படைகள் செயல்பட்டதோடு, சீனப் படைகளை தடுத்தும் நிறுத்தினர்.
தொடர்ந்து, சீனாவின் அத்துமீறல் அந்த பகுதியில் தொடராமல் இருக்கும் வகையில், இந்திய படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு, கடும் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், சீனா தனது அதிருப்தியை தெரிவித்தாலும், இந்தியா பின்வாங்க மறுத்துவிட்டது. சீனாவை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம் என்றும், மத்திய அரசு தரப்பில் பலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வரால், இதுவரையிலும் எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால், நேற்று அவர் முதல்முறையாக, தனது மௌனத்தை உடைத்ததோடு, சீனாவை எதிர்கொள்ளும் திறன், இந்தியாவுக்கு உள்ளதென்றும், சீனாவைக் கண்டு அச்சம் இல்லை என்றும் தெரிவித்தார். ராஜ்யசபாவில் , அவர் கூறிய இந்த கருத்து, பல தரப்பிலும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டால், இந்தியாவுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பலருக்கும் இருந்த நிலையில், அதனை போக்கும் வகையில், சுஷ்மா பேசியுள்ளார். சீனா, போர் அச்சுறுத்தலை தொடர்ந்து விடுத்து வருவதால், அதற்குப் பதிலடி தரும் பணிகளை, மத்திய அமைச்சர்களும் மேற்கொண்டுள்ளனர். நாட்டு மக்களுக்கு, இந்த விவகாரத்தில் நம்பிக்கை தரவே, அவர்கள் இவ்வாறு செயல்படுவதாக, அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.