இந்திய சினிமாவில் திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுபடுவது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப்பச்சன் கூட 1980களில் அரசியலில் குதித்து காங்கிரஸ் சார்பா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆகவும் ஆனார். இருப்பினும் மூன்றே வருடங்களில் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சில காலம் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார். தற்போது அரசியலை விட்டு விலகி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அமிதாப்பைப் போன்றே தீவிர அரசியலில் ஈடுபட்டு விலகியவர் சிரஞ்சீவி. எம்எல்ஏ, எம்பி, மத்திய மந்திரி ஆக பதவி வகித்த சிரஞ்சீவி, சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவர்கள் தன்னுடைய நண்பர்கள் என்பதால் அப்படி கேட்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிரஞ்சீவியை அரசியலுக்கு வர வேண்டாமென அவருக்கு முன்பே அரசியலில் ஈடுபட்டு விலகிய அமிதாப்பச்சன் கூறியிருக்கிறார். இது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அமிதாப் தெரிவித்துள்ளார். தான் கூறியதைக் கேட்பாமல் சிரஞ்சீவி அரசியலில் இறங்கியதாக அமிதாப் வருத்தப்பட்டுள்ளார். இருப்பினும் சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தது தனக்கு மகிழ்ச்சி என்றும் அமிதாப் தெரிவித்துள்ளார்.

