வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, அமீர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் வட சென்னை. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
தனுஷ் பேசியதாவது : வட சென்னை, 2003-லேயே ஆரம்பித்த பயணம். பொல்லாவதனுக்கு பிறகு பண்ணலாம் என்று இருந்தோம். ஆனால் பெரிய படம், இந்த கதையை அப்போது பண்ணும் அளவுக்கு மார்க்கெட் இல்லை என்பதை வெற்றிமாறன் உணர்ந்திருந்தார். ஆடுகளம் முடித்தோம். மீண்டும் வட சென்னை பற்றி யோசித்தோம். ஒரு பிரேக் எடுக்கலாம் என வெற்றிமாறன் சொன்னார். பிறகு ஒருநாள் போன் செய்து, வடசென்னை கதையை சிம்புவை வைத்து இயக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். நானும் சூப்பர் சார், நல்ல பண்ணுங்கள், ஆனால் அந்தப்படத்தில் நான் இருக்க மாட்டேன் என்றேன்.
அமீர் நடித்த குமாரு கேரக்டரில் நடிக்க சொன்னார். 40 நிமிடம் வரக்கூடிய அந்த கேரக்டர் மிகவும் பவர்புல்லானது என்றார். பதிலுக்கு நான், நானும் சாதாரண மனிதன் தான், எனக்கு அதில் உடன்பாடு கிடையாது, தவறாக எண்ணாதீர்கள் என்றேன். பிறகு இருவரும் வேறு வேறு திசையில் பயணித்தோம்.
மீண்டும் ஒருநாள் வெற்றிமாறன் போன் செய்து வடசென்னை படம் சிம்புடன் பண்ண முடியாமல் போய் விட்டது என்றார். அந்தசமயத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னால் தவறாகிவிடும் என்று மீண்டும் மறுத்தேன். ஆனாலும் வடசென்னை என்னை விடுவதாக இல்லை. வெட்கமே இல்லாமல் சொல்றேன், இது திரும்ப என்னிடமே வந்தது மகிழ்ச்சி.
இவ்வாறு தனுஷ் பேசினார்.