திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, டப்பிங் கலைஞராகவும் உள்ளார். முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி வரும் இவர், டப்பிங் யூனியனில் உறுப்பினராகவும் உள்ளார். பிப்ரவரி 15ந் தேதி டப்பிங் யூனியன் தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார்.
மீடூ விவகாரத்தில் ராதாரவி மீது குற்றம் சாட்டிய சின்மயி, சங்கத்தில் உறுப்பினருக்கான பணம் கட்டவில்லை என கூறி அவரை நீக்கினார். பின் கோர்ட் வரை சென்று மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது முதலே இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.
இந்நிலையில் நடக்கும் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து சின்மயி களமிறங்கினார். தலைவராக சின்மயி, செயலாளராக முரளிகுமார், மற்ற பதவிகளுக்கு, காளிதாஸ், மயிலைகுமார், ராஜகோபால், ஜசிந்தா, தீனா, மனோ, சுஜி, ஜேம்ஸ் ஆகியோர் போட்டியிடுவதாக கூறி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சின்மயி மனு நிராகரிக்கப்படலாம் என்ற நிலையில் தற்போது அவரது மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். சங்க விதிமுறைப்படி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராதாரவி போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
நீதிமன்றத்தை நாட முடிவு?
இதற்கிடையே தன் மனு நிராகரிக்கப்பட்டால் கோர்ட்டை நாட முடிவு செய்திருந்தார் சின்மயி. அதன்படி இவர் கோர்ட்டை நாடலாம் என தெரிகிறது.

