இந்தி தொலைக்காட்சி தொடர்களின் நட்சத்திர நாயகி டிகன்கனா சூர்யவன்ஷி. 7 வருடங்களுக்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக இந்தி தொடர்களில் நடித்தார். அதன்பிறகு சகுந்தலா, பலிக்கா வேது, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். இந்தி பிக்பாஸ் 9வது சீசனிலும் பங்கேற்றார்.
கடந்த ஆண்டு பிரைடே படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஆனார். அதன் பிறகு ஜிலேபி, ரங்கீலா ராஜா படங்களில் நடித்தவர் ஹிப்பி படத்தின் மூலம் தெலுங்கிற்கு வந்தார். தற்போது தனுஷ் ராசி நேயர்களே படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தனுசு ராசி நேயர்களே டிரைலர் வெளியான பிறகு தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து என் மீது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். விலை மதிக்க முடியாத இந்தப் பரிசு எனக்கு மிகுந்த வலிமையைத் தருகிறது. தனுசு ராசி நேயர்களே முதல் படமாக இருந்தாலும் இயக்குநர் சஞ்சய் பாரதி, பரந்த மனதுடன் என்னைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றியது ஒரு சுவையான அனுபவம். அற்புதமான குணங்களைக் கொண்ட அவர் ஓர் அருமையான நடிகர். மிக அமைதியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது பணியில் மட்டுமே மிகவும் கவனம் செலுத்துபவர். இப்படத்தில் நடத்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து, நன்கு கவனித்துக் கொண்டார்கள். என்கிறார் டிகன்கனா சூர்யவன்ஷி.

