ஏற்கெனவே வெளியாகி ஓரிரு நாளில் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டட அழகன்ற சொல்லுக்கு அமுதா என்ற படம் நாளை வெளிவருகிறது. ரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, திலீபன், வளவன், உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ரிஜன் சுரேசே இயக்கி உள்ளார். படத்தை மீண்டும் வெளியிடுவது குறித்து அவர் கூறியதாவது:
படத்தை கஷ்டப்பட்டு முன்பு வெளியிட்டோம். ஆனால் முதல்வர் ஜெயலிதா இறந்து விட்டதால் ஏற்பட்ட பரபரப்பில் தியேட்டர்காரர்கள் படத்தை திரையிடாமல் திருப்பித் தந்து விட்டனர். படம் நன்றாக இருந்தாலும், அப்போது செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை.ஆனாலும் இந்தப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தோதான தேதியை பார்த்துவந்தோம்.
இந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.
அந்தப்படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்தசமயத்தில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது. என விளக்குகிறார் நாயகன் ரிஜன் சுரேஷ்.