நீண்டகாலமாக மரத்தை சுற்றி டூயட் பாடி வந்தவர்தான் சமந்தா. ஆனால், திருமணத்திற்கு பிறகு அவரது கவனம் திசை திரும்பி விட்டது. எந்த படமாக இருந்தாலும் தானும் அந்த படத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார். அதனால் அதை மனதில் கொண்டுதான் புதிய படங்களில் அவர் கமிட்டாகி வருகிறார்.
தற்போது அவர் நடித்து வரும் படங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ராம்சரணுடன் நடித்துள்ள ரங்கஸ்தலம் இதுவரை நான் நடிக்காத மாறுபட்ட வேடம். நான் வாழ்ந்து பார்த்திராத கிராமத்து பெண் வேடம். இந்த வேடத்தில் நான் நடித்தேன் என்பதை விட கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
மகாநதியில் ஜமுனா வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது தவறு. நான் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறேன். அது என்னவென்று இப்போதே சொல்லி சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை.
யு-டர்ன் ரீமேக்கில் ஒர்ஜினல் கதையில் நடித்த நடிகையையிடமிருந்து மாறுபட்டு எனக்கென ஒரு பாணியை வைத்து நடிக்கிறேன். யுடர்ன் கன்னட படத்தைப்பார்த்தவர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கக்கூடிய வகையில், அந்த படத்தில் எனது வேடம் வெளிப்படும் என்று கூறியுள்ள சமந்தா, இப்படி ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறேன் என்கிறார் சமந்தா.